உலகம்

“ஐஎஸ்ஐஎஸ் போல ஹமாஸும் நசுக்கப்பட வேண்டும்” – இஸ்ரேல் பிரதமர்

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைப் போன்றதுதான் எனவும்,   ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு எவ்வாறு நசுக்கப்பட்டதோ அதேபோல், ஹமாஸ் அமைப்பும் நசுக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

காசா முனையை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது நடத்திய கொடூரத் தாக்குதலை அடுத்து, காசாவுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேலுக்கு இருக்கும் கோபம் எத்தகையது என்பதை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இரண்டு முக்கிய தருணங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டணி பிளிங்கன் கடந்த 12ஆம் திகதி இஸ்ரேல் வந்து பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்துப் பேசினார். அப்போது, நெதன்யாகு பேசியது அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அவர், “போர் வீரர்கள் நிறைந்த ஒரு நாட்டுக்கு, சிங்கங்கள் நிறைந்த ஒரு நாட்டுக்கு, தன்னைச் சுற்றி இருக்கும் தீய சக்திகளை தோற்கடிப்பதில் உறுதிகொண்டிருக்கும் ஒரு நாட்டுக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். இங்கே ஒவ்வொரு மணி நேரமும் திகில் கதைகளையும், வீரம் நிறைந்த கதைகளையும் கேட்க முடியும். திகில் கதைகள் எங்கள் எதிரிகளுக்கானது வீரம் நிறைந்த கதைகள் எங்களுக்கானது.

ஹமாஸ் தன்னை நாகரிகத்துக்கான எதிரியாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. வெளிப்புற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீதும், வீடுகளில் குடும்பத்தோடு இருந்தவர்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். பெற்றோரின் கண் முன் குழந்தைகளைக் கொன்றிருக்கிறார்கள். குழந்தைகளின் கண் முன் பெற்றோரை கொன்றிருக்கிறார்கள். பலரை உயிரோடு கொளுத்தி இருக்கிறார்கள். பலரது தலையை கொய்திருக்கிறார்கள். சிறுவர்களைக் கடத்திச் சென்று அவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். மற்றவர்களை துன்பப்படுத்தி, அதை கொண்டாடி இருக்கிறார்கள். தீய சக்திகள்தான் இத்தகைய கொண்டாடட்டங்களில் ஈடுபடுவார்கள்.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைப் போன்றதுதான். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு எவ்வாறு நசுக்கப்பட்டதோ அதேபோல், ஹமாஸ் அமைப்பை நசுக்க வேண்டும். ஐஎஸ்ஐஎஸ் எவ்வாறு பார்க்கப்பட்டதோ அதேபோல ஹமாஸ் அமைப்பையும் பார்க்க வேண்டும். அவர்கள் துடைத்தெறியப்பட வேண்டும். அவர்களை எந்த ஒரு தலைவரும் சந்திக்கக்கூடாது; எந்த நாடும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது; யாரேனும் அடைக்கலம் கொடுத்தால் அவர்களுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும். வரும் நாட்கள் மிக கடுமையானதாக இருக்கும். ஆனால், நாகரிக சக்திகள், தீய சக்திகளை வெல்லும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோட் ஆஸ்டின் உடனான சந்திப்பின்போது பேசிய பெஞ்சமின் நெதன்யாகு, “பல அம்சங்களில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைவிட ஹமாஸ் மிகவும் மோசமானது. நாகரிக உலகம் ஒன்றிணைந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக சண்டையிட்டது. அதேபோல், ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் புரிந்து வரும் எங்களுகக்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து ஆதரவு தர வேண்டும்” என்று இஸ்ரேல் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *