உலகக் கிண்ணத்திலிருந்து தசுன் ஷானக விலகல்; புதிய வீரர் சேர்ப்பு
இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக விலகியுள்ளார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணி தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் படுதோல்வியைச் சந்தித்ததுள்ளது. இதனால் அந்த அணி புள்ளிப்பட்டியளில் 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது தசுன் ஷானகவிற்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து scan பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 3 வார காலம் ஓய்வு அவசியம் என தெரிவிக்கப்பட்டது. இதனால் அவருக்குப் பதிலாக இளம் சகலதுறை வீரர் சாமிக கருணாரத்னவிற்கு வாய்ப்பளிக்க இலங்கை அணியின் முகாமைத்துவம் ஐசிசி இடம் அனுமதி கோரியது. இந்த முடிவுக்கு ஐசிசி தொழில்நுட்பக்குழு சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் சாமிக கருணாரத்ன மாற்று வீரராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதனால் தற்போது இந்தியாவில் இருக்கும் அவர் நாளை (16) அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்காக 21 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள சாமிக கருணாரத்ன, 443 ஓட்டங்களையும், 24 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இதனிடையே, தசுன் ஷானக உலகக் கிண்ணத்திலிருந்து விலகும் நிலையில் தற்போது உதவி தலைவரான குசல் மெண்டிஸுக்கு உலகக் கிண்ணத் தொடரின் எஞ்சிய போட்டிகளில் தலைவராக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இம்முறை ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. இலங்கையின் பந்துவீச்சு தொடர்ந்து சிக்கலாகவே இருந்து வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது போட்டியில் 428 ஓட்டங்களை வாரிக்கொடுத்த கொடுத்த இலங்கையின் பந்துவீச்சுப் படை, பாகிஸ்தான் உடனான போட்டியில் 344 ஓட்டங்கள் குவித்தும் எதிரணியைக் கட்டுப்படுத்தத் தவறியது.
இதேவேளை, ஏற்கெனவே வனிந்து ஹஸரங்க, துஷ்மந்த சமீர ஆகியோர் காயம் காரணமாக இம்முறை ஒருநாள் உலகக் கிண்ணத்தை தவறவிட்டனர். இந்த நிலையில், தற்போது சகலதுறை வீரரான தசுன் ஷானகவும் உலகக் கிண்ணத்திலிருந்து விலகியுள்ளது இலங்கைக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இது இவ்வாறிருக்க, இலங்கையின் இளம் வேகப் பந்துவீச்சாளரான மதீஷ பதிரன தோள்பட்டை உபாதைக்கு முகம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் வாய்ப்பினை இழக்கலாம் என அறியக்கிடைத்திருக்கின்றது.