ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் முதன்முறையாக கிரிக்கெட் சேர்ப்பு
2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் T20 கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மும்பையில் தற்போது நடைபெற்று வருகின்ற சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகக் குழு கூட்டத்தில் வைத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்தும் ஒவ்வொரு நகரமும் (Host City)தங்கள் நாடுகளில் நடத்தும் ஒலிம்பிக்கில் புதிய விளையாட்டுகளைச் சேர்க்க அனுமதி வழங்கப்படும்.
அதன்படி, 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்தும் லொஸ் ஏஞ்சல்ஸ், பேஸ்பால் (Baseball) மற்றும் சாஃப்ட்பால் (Softball), லாக்ரோஸ், ஸ்குவாஷ், ஃப்ளாக் புட்பால் மற்றும் கிரிக்கெட் என ஐந்து விளையாட்டுகளை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் கோரிக்கையாக வைத்தது. இதனையடுத்து மும்பையில் நடைபெற்று வருகின்ற ஒலிம்பிக் குழுவின் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்தக் கோரிக்கைகள் ஆலோசிக்கப்பட்டது. முடிவில் ஒலிம்பிக்கில் மேற்கூறிய 5 விளையாட்டுகளை சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பாக், இந்த ஐந்து விளையாட்டுக்களை சேர்ப்பது குறித்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிய சர்வதேச விளையாட்டுகள் அமெரிக்காவில் நடைபெறும். மேலும், புதிய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஒலிம்பிக்கில் இணைவார்கள் என்றார்.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் T20 ஆட்டமாக நடத்தப்படலாம் என ஐசிசி ஏற்கெனவே பரிந்துரைத்திருந்தது. ஐசிசி தரவரிசையில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக்கில் விளையாட நேரடித் தகுதி பெறும். உலகக் கிண்ணத்திற்கு விளையாடுவது போல 50 ஓவர்கள் அல்லது T20 வகையிலான கிரிக்கெட்டே சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதால் T10 முறை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆட்ட நேரத்தைக் கருத்தில் கொண்டு 50 ஓவர்கள் போட்டியைப் பரிசீலனை செய்யவில்லை. சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் விழாவில் T20 ஆட்டம் இடம்பெற்றது.
முதன்முதலாக 1900 இல் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் விளையாடப்பட்ட கிரிக்கெட்டானது 128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் இடம்பெறவுள்ளது. 1900 இல் பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 நாட்களுக்கு நான்கு இன்னிங்களாக கிரிக்கெட் விளையாடப்பட்டது. இதில் பிரான்ஸை வீழ்த்தி பிரித்தானியா தங்கப பதக்கம் வென்றது. இதன்பிறகு, 128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கிரிக்கெட் சேர்க்கப்படவுள்ளது.