146வது வருட புனித ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ் பராயண மஸ்லிஸ்
வரலாற்று புகழ்மிகு பேருவளை மாளிகாஹேனை பைத்துல் முபாரக் வதாருல் முஸ்தபா புஹாரித் தக்கியாவில் 146வது வருட புனித ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ் பராயண மஸ்லிஸ் எதிர்வரும் (28-12-2024) அதிகாலை ஸுபஹ் தொழுகையின் பின்னர் ஆரம்பமாகும்.
காதிரிய்யத்துன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் சங்கைக்குரிய நாயகம் அல் ஆலிமுல் பாழில் வஷ்ஷெய்ஹு காமில் அஹ்மத் பின் முஹம்மத் ஆலிம் காதிரிய்யதுன் நபவி தலைமையில் இப் புனித மஜ்லிஸ் ஆரம்பிக்கப்படும்.
வெள்ளிக்கிழமை தவிர தொடர்ந்து ஒரு மாத காலம் புனித ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ் பராயணம் செய்யப்படுவதோடு, விளக்கவுரையும் இடம் பெறும்.
2025 ஜனவரி மாதம் 30ஆம் திகதி (30-01-2025) முற்பகல் தமாம் பெரிய கந்தூரி இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புஹாரிக் கந்தூரி மஜ்லிஸை முன்னிட்டு இலங்கை ரயில்வே திணைக்களம் 146வது வருடமாகவும் 2025 ஜனவரி 29ம், 30ம் திகதிகளில் கொழும்பு – அளுத்கம, காலி – அளுத்கம இடையே விஷேட ரயில் சேவைகளை நடாத்தவுள்ளது.
அத்தோடு, கரையோர ரயில் சேவையில் ஈடுபடும் சகல கடுகதி ரயில் வண்டிகளும் ஜனவரி 29ம், 30ம் திகதிகளில் பேருவளை ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். மேலும் அளுத்கம – களுத்துறை இடையே விஷேட பஸ் சேவைகளும் இடம் பெறவுள்ளன.
கந்தூரி மஜ்லிஸில் நாட்டின் நாலா பகுதிகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்குபற்றுவர். பேருவளை பொலிஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வர்.
சரித்திரப் பிரசித்தி பெற்ற பைத்துல் முபாரக் வதாருல் முஸ்தபா புஹாரித் தக்கியா பாரிய அளவில் மிக அழகான முறையில் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
கந்தூரி தமாம் தினமும் அதற்கு முன்னைய தினமும் நபவிய்யா இலவச மருத்துவ சேவை முகாமும் புஹாரித் தக்கியா வளவில் இடம் பெறவுள்ளது.
(பேருவளை பீ.எம் முக்தார்)