34 வருடங்களாக கடந்த அரசாங்கங்களால் கைவிடப்பட்ட வடக்கு முஸ்லிம்கள்.
1990ஆம் ஆண்டு யுத்த சூழ் நிலை காரணமாக வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு ஒக்டோபர் மாதத்துடன் 34 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் வடமாகாணத்தை விட்டு துரத்தப்பட்ட முஸ்லிம்கள் 34 வருடங்கள் கடந்தும் பூரணமான மீள் குடியேற்றம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாது கடந்தகால அரசாங்கங்களால் கைவிடப்பட்ட ஒரு சமூகமாக வாழ்ந்து வருகின்றனர்.
வடக்கில் தமிழ் மக்களுடன் முஸ்லிம்கள் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கும்போல் வாழ்ந்து வந்த வடமாகாண முஸ்லிம்களுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு கரி நாளாக 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிப் பகுதிகளைக் குறிப்பிடலாம். விடுதலைப் புலிகளால் வடக்கை விட்டு ஒட்டுமொத்த முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என்ற சடுதியான அறிவித்தல் ஒவ்வொரு வடமாகாண முஸ்லிம்களையும் தட்டுத்தடுமாறி நிலை குலைய வைத்த சம்பவம் மறக்க முடியாத வடுக்களாகவே இருந்து வருகின்றது.
சொந்த பூர்வீகத்தை விட்டு வெளியேறுவது என்பது எவராலும் ஜீரணிக்க முடியாத ஒரு சம்பவமாகும். அது மட்டுமல்லாது வாழ்வா? சாவா? என்ற இரண்டுக்கும் மத்தியில் தமது சொத்துக்கள்இ வீடுகள்இ தொழில் துறைகள்இ காணிஇ பூமிகள் என அனைத்தையும் விட்டு விட்டு வெளியேறுவது என்பது சாதரண ஒரு மனிதனாலோ அல்லது மனித சமுகத்தினாலோ ஏற்றுக் கொள்ளவோ அல்லது ஜீரணித்துக் கொள்ளவோ முடியாத ஒரு கசப்பான சம்பம் எனலாம். அந்தளவிற்கு முழு முஸ்லிம் சமுகத்தினதும் மனங்கள் சுக்கு நூறாகி கண்ணீரும் கம்பலையுடனும் தமக்கு ஏற்பட்டுள்ள இந்த மரண அச்சுறுத்தல் நிலைமைகளை சொல்ல முடியாத ஒரு மாபெரும் துன்பகரமான நாட்களாக அந்த 90ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாத இறுதி நாட்களைக் குறிப்பிடலாம்.
தமது போராட்ட வெற்றிக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் வடகிழக்கினை தாமே ஆள வெண்டும் என்ற கர்வத்தின் காரணமாக அவர்கள் வடமாகாணத்திலிருந்த ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் வெளியேற்றி விட்டனர். அவர்கள் எடுத்த தவறான முடிவுகள் வடகிழக்கில் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கும்போல் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் உறவுகளின் ஒற்றுமைக்கும் பாரிய குந்தகத்தை ஏற்படுத்தி சமாதானத்துடனும்இ ஒற்றுமையாகவும் வாழ்ந்த அந்த இரு சமுகங்களையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குள் செல்வதற்கு ஆளாக்கிவிட்டனர்.
இந்தச் செயற்பாடு வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை கண்ணீர் கலங்க வைத்ததுடன் சகோதர தமிழ் உறவுகளையும்கூட வாய்விட்டு அழுவதற்கும், கவலை கொள்வதற்கும் வழி சமைத்து விட்டது. ஆயுதத்தின் விளிம்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தவறான தீர்மாணத்தை தமிழ் அரசியல் தலைமைகளோ அல்லது புத்தி ஜீவிகளோ அல்லது சமயத் தலைவர்களோ அதனை நிறுத்துவதற்கு முன்சென்று கேட்பதற்கு முடியாத ஒரு ஆபத்தான கட்டத்தில் இருந்தமையும் கவலையானதொரு விடயமே.
வடக்கை தமிழ் பிரதேசமாக பிரகடனப்படுத்தி தமது பூர்வீகமாக ஆக்கி தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து தமது தேவைகளை நிறைவு செய்வதற்கான முயற்சியின் ஒரு வடிவமே வடமாகாண முஸ்லிம்கள் ஒரு தலைப்பட்சமாக வெளி யேற்றப்பட்டமை என அரசியல் ஆய்வாளர்கள் தெவிக்கின்றனர்.
இவ்வாறு விடுதலைப் புலிகள் தனிநாடு கோரி வடமாகாண முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றியமை முஸ்லிம்களால் என்றும் மறக்க முடியாத ஒரு துன்பகரமான பதிவினை ஏற்படுத்திய சம்பவமாகும். வுடமாகாண முஸ்லிம்கள் எந்தவொரு கட்டத்திலும் தனிநாடு கோரியதோ அல்லது இடத்தை பரித்துக் கேட்டதோ இல்லை. இவ்வாhறனதொரு நிலையில் முஸ்லிம்கள் துரத்தப்பட்டமை மிகவும் வேதனையானதொரு சம்பவமாகவே பதிவாகியுள்ளது. காரிருள் சூழ்ந்த அந்தக் காலத்து துன்பியல் சம்பவங்கள் நாட்களாகவும்இ வாரங்களாகவும்இ மாதங்களாகவும்இ வருடங்களாகவும்இ தஸாப்தங்களாகவும் கடந்து இவ்வருட (2024) இந்த ஒக்டோபர் மாதத்துடன் முஸ்லிம்கள் துரத்தப்பட்டு 34 வருடங்களைத் தாண்டி 35வது வருடத்தில் காலடி பதிக்கின்றமை கவலையோடு குறிப்பிட வேண்டியதொரு விடயமாகும்.
இவ்வாறு 34 வருடங்கள் தாண்டிய இம்மக்களின் அவல நிலை தொடர்ந்தும் அகதி வாழ்வாகவே அமைந்து கொண்டு செல்கின்றது. யுத்த வெற்றிக்குப் பின்னரான 15 ஆண்டுகள் நிறைவடைந்தும் வடமாகாண முஸ்லிம்கள் ஆட்சிக்கு வருகின்ற அரசியல் வாதிகளாலும், ஆட்சியாளர்களாகவும், அரசாங்கங்களினாலும் கண்டு கொள்ளப்படாத ஒரு சமுகமாக தத்தளித்தக் கொண்டிருக்கின்றனர் எனலாம். ஒவ்வொரு கனப்பொலுதிலும் தமது அகதி வாழ்விற்கு விடிவு கிடைக்காதா? தம்மை தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்ற மாட்டார்களா? என்ற கனவுகளுடனேயே தமது துன்பியல் நாற்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். இன்று வரை வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியமர்வு என்பது காணல் நீராகவே அந்த மக்களுக்கு இருந்து வருகின்றது.
2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த மஹிந்த அரசும்சரி அதற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசுகளும் சரி இடம் பெயர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் துன்பப்பட்டுக் கொண்டு; அல்லலுறும் முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் இவர்கள் எல்லோருமே மாற்றாந்தாய் மனப்பான்மையிலேயே இருந்து கொண்டு தாம் அந்த மக்களுக்காக ஆற்ற வேண்டிய கருமங்களை கவனத்திற் கொள்ளாது தட்டிக்கழித்து வந்து கொண்டிருக்கும் செயற்பாடுகளே இடம் பெற்று வருகின்றன.
இடம் பெயர்ந்த முஸ்லிம் சமுகம் மஹிந்த அரசைப் பொருத்தவரை மீள்குடியேற்ற விடயத்தில் நம்பிக்கை அற்றவர்களாகவே இருந்தனர் காரணம் அக்கால ஆட்சி இனவாதத்திற்கு முற்றிலும் உட்பட்ட ஆட்சியாக இருந்தமையேயாகும். இவ்வாறான நிலையில் முஸ்லிம் சமுகம் தலைகீழாக நின்றாலும் தமக்கான சலுகைகளைப் பெறுவதென்பது குதிரைக் கொம்பாகவே அமைந்து விட்டது. இதன் காரணமாக அந்தச் சமுகம் மஹிந்த ராஜபக்ஸ அரசில் விருப்பமற்றவர்களாக இருப்பதற்கும்இ விலகிச் செல்வதற்கும் அந்த அரசின் நடவடிக்கைகள் காரணங்களாக அமைந்திருந்தன.
அதன் பின் வந்த அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட ஒருசில முன்னெடுப்புக்கள் கூட வடக்கு முஸ்லிம்களைப் பொருத்தவரை காணல் நீரான கதையாகவே மாறிவிட்டது. கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்று அரசாங்கம் ஒதுக்கிய பல கோடி ரூபாய்களைக்கூட கடந்த காலத்தில் இருந்த வடமாகாண சபைகள்கூட முட்டாள்தனமாக முடக்கி வைத்து முஸ்லிம் சமுகத்திற்கு அதனை வழங்க வில்லை. முஸ்லிம் சமுகத்திற்கு செய்து கொடுக்க வேண்டிய கடமையும் கடப்பாடும் இருந்தும் அங்கு ஒருசில தமிழ் தலைமைகளால் முஸ்லிம் சமுகம் இன்று வரை பாரபட்சமாக ஓரங்கட்டப்பட்டுக் கொண்டு ஒன்றையுமே கொடுப்பதற்கு விரும்பாத ஒரு சபையாகவும் அதில் இருந்த அரசியல் வாதிகளும் அவற்றிற்கு தடையாக செயல்பட்டு வந்திருந்தமை முஸ்லிம் சமுகத்தினைப் பொருத்த வரை வேதனைப்படுத்தும் விடயமாவும், வன்மையாக கண்டிக்கத்தக்க விடயமாகவுமே இருந்தது என வடமாகாண முஸ்லிம்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேசிய நல்லிணக்க அரசு ஆட்சிக்கு வந்து ஆட்சிக் காலம் நிறைவடையும் கட்டம் வரையும் நீண்டகாலப் பிரச்சினையாக புரையோடி இருந்த முஸ்லிம் சமுகத்தின் அகதிவாழ்வு விடயத்தில் அக்கறை காட்டப்படவில்லை. முழு முஸ்லிம் சமுகமும்கூட அந்த அரசின் மீதும் நம்பிக்கையற்றவர்களாகவே இருந்தனர்.
புதிய அரசு தோற்றம் பெற்றபோது நூறுநாள் வேலைத் திட்டத்தில் அப்போது ஆட்சியில் இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்ற விடயங்கள் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியிருந்தமையும் யாவரும் அறிந்த விடயமாகும். ஆனால் அந்த அறிக்கைகூட அப்போதிருந்த அமைச்சர் சுவாமிநாதனால் கொடுக்கப்பட வில்லை. அவருக்கு பிரதமர் விடுத்த கட்டளையானது புஸ்வானமானதையே கண்டு கொள்ள முடிந்ததுடன் அதன் கதையே இல்லாமல் போயும் விட்டது.
இவ்வாறு ஒரு நாட்டின் பிரதமர் பொறுப்பு வாய்ந்த அமைச்சருக்கு கட்டளையிட்டும் அது ஊடகங்கள் வாயிலாக வெளிவந்திருந்த நிலையிலும் இது விடயத்தில் பிரதமரும் அடுத்தகாட்ட நடவடிக்கை எடுக்கவில்லை குறித்த அமைச்சரும் ஒரு காதால் வாங்கி மறுகாதால் விட்டு விட்ட கதையாகவே அமைந்து விட்டது.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி யுத்த வெற்றி கொண்டாடிய முன்னைய அரசும்சரிஇ தற்போதைய அரசும்சரி தாம்பெற்ற வெற்றியின் பயன்களை சமாதானத்தையும், அமைதியையும் பாதிக்கப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் விடயத்தில் ஏற்படுத்திக் கொடுக்கத் தவறி விட்டனர். தொடர்ந்தும் இன்று வரை பாதிக்கப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் பாதிக்கப்படவர்களாகவே தாண்டவமாடுகின்றனர் என்பதே கவலையோடு கூடிய யதார்த்தமான கசப்பான உண்மைகளாகும்.
மன்னார்இ யாழ்ப்பாணம்இ முல்லைத்தீவுஇ வவுனியாஇ கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 1990ஆம் ஆண்டு துரத்தப்பட்ட போது பல ஆயிரமாக காணப்பட்டவர்கள் இன்று பல குடும்பங்களாக பெருகி இடம் பெயர்ந்த மக்களின் தொகை இலட்சக் கணக்காக மாறி இருக்கின்றது.
வடமாகாண முஸ்லிம்களுக்கு சொந்த இடத்தில் வாழ சரியான வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலையில் அவர்கள் கண்ணீருடனும்இ கவலையுடனும் இன்று வரை வடக்கிற்கு வெளியே பல மாவட்டங்களில் ஏக்கத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். தமது பூர்வீகத்தைக் கண்டுகொள்ளும் ஆவலுடன் 34 வருடங்களாக காத்திருப்பதும்;கூட இன்றைய அரசியல் தலைமைகளால் கண்டு கொள்ளப்படாது இருக்கின்றமையும் அந்த மக்களிடத்தில் பாரியதொரு வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.
2009இன் யுத்த வெற்றி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு பூரண மீள்குடியேற்றத்தை தரும் என்ற கனவு முஸ்லிம் மக்களைப் பொருத்த வரை யுத்த வெற்றி இடம் பெற்று 15 வருடங்கள் கடந்தும் எட்டாக் கணியாகவே இருப்பதை இன்று அரசியல் ஆய்வாளர்கள்கூட சுட்டிக்காட்டுகின்றனர். இந்த யுத்த வெற்றியின்போது மஹிந்த அரசால் சர்வதேசத்திற்கு விடப்பட்ட முதலாவது செய்தி இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது எனவே இனி இலங்கையில் அனவரும் எந்தவித அச்சமுமின்றி தமது சமய விழுமியங்களுடன் வாழலாம்இ யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து அகதிகளாக இருப்பவர்கள் விரைவாக மீளக் குடியமர்த்தப்பட்டு அவர்களுக்கான சகல வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்ற செய்தி முஸ்லிம்களைப் பொருத்தவரை வெறும் பூச்சாண்டிக் கதையாகவே அமைந்து விட்டது.
முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் சர்வதேசம் வரை தெரிந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் விடயத்தில் கண்டுகொள்ளாத் தன்மையுடன் மனதாபிமானமற்ற முறையில் இருந்து வருவதும் சர்வதேசம்கூட குறைந்த பட்சம் இலங்கை அரசுக்கு அழுத்தங்களையாவது கொடுக்கலாம் அல்லவா ஆனால் இந்த விடயத்திலும் சர்வதேசமும் தொடர்ந்தும் பிழைகளையே செய்து வருகின்றது.
விரும்பியோ விரும்பாமலோ வடக்கில் தமது பூர்வீகத்திற்கு சென்றால் அங்கு ஒருசில தமிழ் அரசியல் வாதிகளாலும், அவர்கள் சார்ந்த அரச அதிகாரிகளினாலும் புறக்கணிக்கப்படும் சம்பவங்களுக்கு நடந்தேறிய சம்பவங்களே, யுத்தத்தாலும், விடுதலைப் புலிகளாலும் நிர்மூலமாக்கப்பட்ட தமது சொந்த வீடுகளைக்கூட மீள கட்டியெழுப்ப முடியாதளவு தடைகளையும், பிரச்சினைகளையும் அவர்கள் கொடுக்கின்ற விடயம் தொடராகவே இடம் பெற்று வருகின்றன. இந்த விடயம் முஸ்லிம் அமைச்சர்களாலும்இ பாராளுமன்ற உறுப்பினர்களாலும்கூட பாராளுமன்றத்தில் காரசாரமாக பேசப்பட்ட போதிலும் அரசுக்கும்இ சம்பந்தப்பட்டவர்களுக்கும் அது செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகவே இருந்து வருகின்றது.
இது இவ்வாறிருக்க இன்னொரு புறம் படைத்தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வடக்கு முஸ்லிம்களின் குடிமனைகளையும்இ காணிகளையும் பெற்றுக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைமைகளும்கூட பாரிய பிரச்சினையாக இருப்பதுடன் இவற்றிற்கு முகங்கொடுக்க முடியாதளவு சொல்லொனாத் துயரங்களை அடைந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நாட்டுக் குடிமகன் என்ற அடையாளங்களும்இ ஆதாரங்களும் இருந்தும் வடக்கு முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமான கவலைக்கிடமான முறையில் இருந்து வருவதுடன் அரசு முன்வந்து செய்து கொடுக்காத நிலைமைகள்;கூட அவர்களின் மீள் குடியேற்ற விடயத்தில் தொடராக காணப்பட்டு வரும் தடங்கள்களாகவே இருக்கின்றன.
குறிப்பாக முல்லைத்தீவில் முஸ்லிம் சமுகத்தின் காணிகள் முற்றாகவே சூறையாடப்பட்டுள்ளதுடன் அரச காணிகளைக்கூட பெற்றுக் கொள்வதற்கு வடமாகாண சபையும் அங்குள்ள அரசியல் வாதிகளும் தடைகளைப் போட்டு முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக பொய்களைக்கூறி ஆர்ப்பாட்டங்களைக்கூட மேற்கொண்டனர். ஒருசில அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகங்களை பயன்படுத்தி அவர்கள் பொய்ப் பிரச்சாரங்களைக்கூட மேற்கொண்ட சம்பவங்கள் எல்லாம் மலிந்து காணப்படுகின்றன. குறித்த அந்த ஊடகங்களும்கூட நடுநிலை வகிக்காது ஒருசில தமிழ் அரசியல் வாதிகளுக்கும்இ ஒற்றுமையை விரும்பாத குழுக்களுக்கும் சோரம்போகும் ஊடகங்களாக காணப்படுகின்றதையும் அவர்களின் செயற்பாடுகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.
மன்னாரில் சிலாவத்துறைப் பகுதியில் கடற்படையினர் முஸ்லிம்களின் கிராமங்களை முற்றாகவே கையகப்படுத்தி வைத்துக் கொண்டு விடாதிருப்பதும் முஸ்லிம் மக்களை விரக்தியடையச் செய்துள்ளது. நீதியையும்இ நியாயத்தையும் வேண்டி நிற்கும் முஸ்லிம் மக்களுக்கு இந்த விடயங்களில் சட்ட ரீதியான முறையில் எந்தவித ஆக்கபூர்வமான சாதகத் தன்மைகளும் அமைய வில்லை. அதனை செய்து கொடுப்பதற்கு அரசும்கூட முன்வராது மாற்றாந்தாய் மனப்பான்மையில் இருப்பதும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இதேபோல் யாழ்ப்பாணத்திலும் தமது சொந்த வீடுகளைக்கூட பாதுகாத்துக் கொள்ள முடியாதளவு இருப்பதுடன் சட்ட ரீதியான ஆவணங்களைக்கூட காட்ட வேண்டிய நிலைமைகள் இருந்தன. அவற்றை இல்லையென்று சொல்லுமளவிற்கு அங்கு அரச செயற்பாடுகளில் அங்குள்ள அதிகாரிகள் இருப்பதும் முஸ்லிம் சமுகத்தினால் அவ்வப்போது இனங்காணப்பட்டுள்ளது. மன்னாரிலும்இ வவுனியாவிலும்கூட இந்த விடயங்கள் சாதாரணமாகவே நடந்தேறி வந்துள்ளன. இதன் காரணமாகவே அப்;போதுள்ள வடமாகாண சபை முஸ்லிம் சமுகத்தினை ஓரங்கட்டும் ஒரு மாகாண சபையாக இருந்துள்ளதை முஸ்லிம் ஆர்வளர்களும்இ புத்தி ஜீவிகளும் சுட்டிக்காட்டி வருவதுடன் அப்போதிருந்த மாகாண சபை தேவையில்லை அதனைக் கலைத்துவிட வேண்டும் எனவும் கூறிவந்துள்ளனர்.
இவ்வாறு வடகிழக்கு யுத்தத்தால் முஸ்லிம் மக்கள் இன்று வரை பல்வேறுபட்டு மேடு பள்ளங்களை கடந்து தமது வாழ்வியலை முன்னெடுக்க வேண்டிய நிலையிலேயே இருந்து வருகின்றனர். பலவந்தமாக இவ்வாறு விரட்டப்பட்டு இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் எதிர்பார்ப்பது 1990ஆம் ஆண்டுக்குமுன் தமிழ் மக்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்ததுபோல் மீண்டும் ஒற்றுமையாக அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கும்போல் வாழ வேண்டும் என்ற ஆவலுடனேயே இருக்கின்றனர்.
இதுவரை காலமும் இலங்கை அரசோ அல்லது இந்த அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளோ வடக்கு முஸ்லிம்களின் விடயத்தில் முன்வராத நிலையில் ஐக்கிய நாடுகள் சபையையும்இ சர்வதேசத்தையும் நம்பி இருந்த நிலையிலும் அதுவும் துரத்தப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் எட்டாக்கணியாகவே இருக்கின்றது. இந்த நாட்டின் முஸ்லிம்கள் ஆட்சியில் பங்கையோ அல்லது நாட்டைப் பிரித்து தமக்கு பங்கு கேட்கும் எந்த ஒரு விடயத்திலும் அவர்கள் ஈடுபடாத நிலையிலும்கூட இந்த மக்கள் ஓரங்கட்டப்படுவது விடயத்தில் பாரிய சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் காலங்களில் மட்டும் அரசும்இ அரசியல் வாதிகளும் தமது வாக்கு வேட்டைக்காக அந்த மக்களின் முன்வந்து உங்களை நாம் ஆட்சிக்கு வந்தால் மீள் குடியேற்றுவோம்இ அது செய்து தருவோம்இ இது செய்து தருவோம் என்று மண்டியிடுவதும்இ மூட்டை மூட்டையாக பொய் வாக்குறுதிகளை வழங்குவதும் நடந்தேறிய சம்பவங்களாகும்.
பாதிக்கப்பட்ட மக்கள் இன்று கல்விஇ சுகாதாரம்இ தொழில் உள்ளிட்ட பல தேவைப்பாடுகளுடன் காணப்படுவதுடன் இவ்விடயங்களில் முஸ்லிம்கள் பின்னோக்கிய நிலையில் இருப்பதும் கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களில் இருந்து அறிய முடிகின்றது. இந்த வகையில் இந்த மக்கள் பூரணமான மீள் குடியேற்றத்தையே விரும்புகின்றனர்.
எனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் வடமாகாண முஸ்லிம்கள் ஒரு அவல வாழ்விற்கு உட்பட்ட ஒரு சமுகமாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருந்து வரும் நிலையில் இருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும்இ அரசாங்கத்திற்கு உரிய விடயமாகும்.
எனவே பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கப்பட வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் அரசாங்கத்திற்கே உள்ளது. இந்த விடயத்தை அரசு சரியான முறையில் முன்னெடுத்து துரத்தப்பட்ட அந்த மக்களை அவர்களது பூர்வீகத்தில் நிம்மதியாக வாழ வழிசமைக்க வேண்டும் என்பது வடமாகாண முஸ்லிம்களின் ஏக்கமாகும்.
(சத்தார் எம் ஜாவித்)