120 மில்லியன் பெறுமதியான மருந்து பொருட்கள் கட்டாரினால் அன்பளிப்பு.
இந்நாட்டில் இருதய மற்றும் சுவாச நோயாளர்களுக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் 120 மில்லியன் ரூபாவிற்கும் அதிகபெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கட்டார் அரசினால் சுகாதார அமைச்சிடம் இன்று (15) கையளிக்கப்பட்டது.
கத்தாரின் நாட்டுப் பணிப்பாளர் திரு. எஸ். மஹ்மூத் அபுகலிபாவினால் இந்த மருந்துப் பொருட்கள் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவிடம் மருத்துவ விநியோகத் திணைக்களத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந்த மருந்து நன்கொடையை பெற்றுக்கொண்ட சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன, இந்நாட்டின் சுகாதார சேவையை வலுப்படுத்த கட்டார் அரசு பல சந்தர்ப்பங்களில் இது போன்ற பல நன்கொடைகளை வழங்கியுள்ளதாகவும், அதற்காக தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
இலவச சுகாதார சேவைகயை வழங்கும் எம்மை போன்ற நாடுகளுக்கு வருடாந்தம் அரசாங்கம் செலவிடும் தொகைக்கு மேலதிகமாக இவ்வாறான நன்கொடைகளை பெற்றுக் கொள்வதன் மூலம் மக்களுக்கு உகந்த சுகாதார சேவைகளை வழங்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கைக்கும் கட்டார் நாட்டிற்கும் இடையில் நீண்டகாலமாக சர்வதேச உறவுகள் இருப்பதாகவும், சுகாதாரத்தை வலுப்படுத்துவதற்கு இவ்வாறான நன்கொடைகள் தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் கட்டார் அரசின் நாட்டுப் பணிப்பாளர் திரு.எஸ்.மஹ்மூத் அபுகலிபா தெரிவித்தார்.
சுகாதார செயலாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் பாலித மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, வைத்திய வழங்கல் பிரதி பணிப்பாளர் நாயகம் ஜி.விஜேசூரிய, வைத்திய வழங்கல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் டெதுனு டயஸ் மற்றும் சுகாதார அமைச்சு மற்றும் கத்தாரை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.